இலங்கையில் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகிய மூன்று ஆவணங்களுக்கும் ஒரே இலக்கத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா – சப்ரகமுவ பிராந்திய பிரதி பதிவாளர் நாயகம் நிஷாங்க விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட செயலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதிவாளர் சேவையின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து அதிகாரிகளும் பொறுப்புடனும் திறமையாகவும் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
திணைக்களத்தின் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள், சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய சுற்றறிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக மீண்டும் மீண்டும் அலுவலகங்களுக்கு வர வேண்டிய நிலையைத் தவிர்த்து, அவர்களுக்கு விரைவானதும் துல்லியமானதுமான சேவைகளை வழங்குவது அவசியம் என்றும் நிஷாங்க விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.







