பௌத்த மதத்தைப் பாதுகாத்து போசிக்க வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதால், எந்த அரசாங்கமும் பௌத்தத்துக்கு எதிராகச் செயற்படாது என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரபெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் புதன்கிழமை (25) நடைபெற்ற தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எதிராகச் செயற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினாலும், அதற்கான தெளிவான காரணங்களை முன்வைப்பதில்லை என அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாகச் செயற்படும் பௌத்த தேரர்களுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை பௌத்தத்துக்கு எதிரான செயற்பாடாகக் கருத முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பௌத்தத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி கண்டியிலிருந்து கொழும்புக்கு முன்னெடுக்கப்பட்ட பேரணியிலும் போராட்டத்திலும் பொதுமக்களின் பங்கேற்பு குறைவாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராகச் செயற்படுவதாகக் கூறுவது முற்றிலும் தவறானது எனத் தெரிவித்தார்.







