நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அனைத்து கோழி இறைச்சிக் கடைகளிலும், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையைப் பொதுமக்கள் தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்துவது நாளை (29) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் வெளியிட்டுள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (28) தவிசாளர் தலைமையில் கோழி இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகளின் அடிப்படையில், கோழி இறைச்சியின் சில்லறை விலை தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதைய பொருளாதாரச் சூழலில் கோழி இறைச்சி விற்பனையாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை (29) முதல் அனைத்து கோழி இறைச்சிக் கடைகளிலும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை நுகர்வோருக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையைப் பின்பற்றத் தவறும் கடைகள் தொடர்பில் உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், கடை வணிக அனுமதிப்பத்திரம் தொடர்பாகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தவிசாளர் எச்சரித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர், சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசத்திலுள்ள கோழி இறைச்சிக் கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.








