தாயாரின் கண்டிப்பைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுவன் ஒருவனைத் தெமட்டகொட தொடருந்து நிலையத்தில் வைத்து தொடருந்து பாதுகாப்புப் படையினர் பொறுப்பேற்று, பின்னர் தாயாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று (28) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சிலாபம், விலத்தவப் பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் தந்தை வெளிநாட்டில் வசிப்பதால், அவர் தாயாருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 27ஆம் திகதி ஏதோவொரு காரணத்திற்காகத் தாயார் சிறுவனைக் கண்டித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நேற்று வழமைபோன்று பாடசாலைக்குச் சென்ற சிறுவன், பாடசாலை முடிந்ததும் சிலாபம் தொடருந்து நிலையத்திலிருந்து தொடருந்தில் ஏறித் தெமட்டகொட தொடருந்து நிலையத்தைச் சென்றடைந்துள்ளார்.
அங்கு சிறுவன் தனியாக இருப்பதைக் கவனித்த தொடருந்து நிலையப் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் வீட்டை விட்டு வெளியேறியமை தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயாரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தனது மகனைக் காணவில்லை எனத் தாயாரும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், சிறுவனைப் பொறுப்பேற்பதற்காகத் தாயார் சிலாபம் பொலிஸ் அதிகாரிகளுடன் தெமட்டகொடைக்கு வருகை தந்துள்ளார். இதனையடுத்து, சிறுவன் தாயாரிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளார்.








