வயல்வெளிகள், காடுகள் மற்றும் நதிக்கரைகளில் இரவில் ஒளிரும் மின்மினிப் பூச்சிகள், வாழ்விட அழிவு, செயற்கை ஒளி மாசுபாடு மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.
மின்மினிப் பூச்சிகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதும், இரவு நேரங்களில் அதிகரிக்கும் செயற்கை ஒளியும் அவற்றின் இனப்பெருக்கம் மற்றும் உயிர்வாழ்வைப் பாதிப்பதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, தெருவிளக்குகள், வாகன விளக்குகள் மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து வெளிப்படும் செயற்கை ஒளி, மின்மினிப் பூச்சிகள் தமது ஒளிச் சமிக்ஞைகள் மூலம் இணையைக் கண்டறியும் இயற்கையான செயல்முறையில் இடையூறு ஏற்படுத்துகின்றது. இதனால் சில இனங்களின் இனப்பெருக்க வெற்றி குறையக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மின்மினிப் பூச்சிகளின் முட்டைகள், இளம் பருவங்கள் மற்றும் வளர்ந்த பூச்சிகளைப் பாதிக்கக்கூடும். அவற்றின் இயற்கையான வாழ்விடங்கள் அழிக்கப்படுவதும், நீர்நிலைகள் மற்றும் மண்ணின் தரம் பாதிக்கப்படுவதும் இவற்றின் உயிர்வாழ்வுக்குச் சவாலாக அமைந்துள்ளன.

2024ஆம் ஆண்டு அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் மின்மினிப் பூச்சி நிபுணர் குழுவுடன் தொடர்புடைய ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்த 150 மின்மினிப் பூச்சி இனங்களில் சுமார் 20 சதவீதம் அழிவின் அதிகரித்த அபாயத்தை எதிர்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், உலகளாவிய ரீதியில் பல மின்மினிப் பூச்சி இனங்களின் எண்ணிக்கை மாற்றங்கள் குறித்த போதுமான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின்மினிப் பூச்சிகளைப் பாதுகாப்பதற்கு அவற்றின் இயற்கையான வாழ்விடங்களைப் பாதுகாத்தல், இரவு நேரங்களில் தேவையற்ற செயற்கை விளக்குகளைக் குறைத்தல் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் அவசியமானவை என ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.







