சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 112 குற்றச்சாட்டுக்குட்பட்டவர்கள் 13 நாடுகளில் தலைமறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தலைமறைவாக உள்ள குறித்த நபர்களை 2027ஆம் ஆண்டிற்குள் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்கள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பணம் ஈட்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறு ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் பொலிஸின் இரண்டு விசேட பிரிவுகள் ஊடாக 24 மணிநேரமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான நடவடிக்கைகள்
அரசாங்கம் பொறுப்பேற்கத் திட்டமிட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி:
- 2024ஆம் ஆண்டு: 1,490 மில்லியன் ரூபாய்
- 2025ஆம் ஆண்டு: 1,549 மில்லியன் ரூபாய்
- 2026ஆம் ஆண்டு, நேற்றுவரை: 1,656 மில்லியன் ரூபாய்
இந்தச் சொத்துக்களில் தங்க ஆபரணங்கள், காணிகள், வாகனங்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை உள்ளடங்குகின்றன.
பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றல்
கடந்த இரண்டு ஆண்டுகளிலும் 2026ஆம் ஆண்டிலும் இதுவரை பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவுகள் மற்றும் மதிப்புகள் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளன:
- ஹெரோயின்: 4,483 கிலோகிராம் – 107.942 பில்லியன் ரூபாய்
- ஐஸ் போதைப்பொருள்: 7,129 கிலோகிராம் – 121.64 பில்லியன் ரூபாய்
- கஞ்சா: 33,277 கிலோகிராம் – 5.293 பில்லியன் ரூபாய்
- கொக்கைன்: 333 கிலோகிராம் – 14.306 பில்லியன் ரூபாய்
மேலும், ஐஸ், ஹெரோயின் மற்றும் கொக்கைன் ஆகிய போதைப்பொருட்களை ஐந்து கிராமுக்கு மேல் வைத்திருத்தல், கடத்தல், விற்பனை செய்தல் அல்லது உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களுக்காகக் கைது செய்யப்படுபவர்களுக்கு, நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படக்கூடும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
‘முழு நாடுமே ஒன்றாக’ செயற்றிட்டத்தின் முன்னேற்றம்
2025ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்றிட்டத்தின் கடந்த ஓராண்டு காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவுகள் பின்வருமாறு:
- ஹெரோயின்: 2,835 கிலோகிராம் 682 கிராம்
- ஐஸ்: 3,550 கிலோகிராம் 750 கிராம்
- கொக்கைன்: 297 கிலோகிராம் 135 கிராம்
- கஞ்சா: 11,167 கிலோகிராம் 569 கிராம்
இக்காலப்பகுதியில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 5,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 450 பேருக்கு எதிராகச் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பொலிஸாருக்குச் சவாலாக இருந்தாலும், முப்படையினரின் ஒத்துழைப்புடன் அவை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.








