இலங்கைக்கான பிரித்தானிய உயர்த்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பற்றிக்கை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரெலோவின் உப தலைவரும் பேச்சாளரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரனும் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு இன்று(30) இடம்பெற்றதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, பிரதான விடயமாக அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்ட மசோதா (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் மசோதா (OCB) ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அதிலும் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொள்ள இருக்கும் அபாயங்களை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான நிரந்தர அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக்கான நீதிப் பொறிமுறை, மற்றும் திட்டமிட்டு பின் போடப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தல்கள் என்பவற்றிற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்ற நிலையிலே இந்த சட்டமூலங்களின் ஊடாக அந்தப் போராட்டங்களை ஒடுக்கவும் தனி மனிதர்களை குறி வைத்து வகை தொகை இன்றி கைதுகளை மேற்கொள்ளவும் வழி வகுக்கும் அபாயத்தை பற்றி சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று மனித உரிமை பேரவையின் அறிக்கைகள் தெளிவாக கூறி வருகின்ற போதிலும் அரசாங்கம் அதை முற்றாக நீக்குவதற்கு பதிலாக, அதற்கு பதிலீடான ஆபத்தான சட்டங்களை நடைமுறைப்படுத்த முனைவது தமிழ் மக்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆபத்தான விடயம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
தொடர்ந்து மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் இழுத்தடித்து வருவது எமது பிரதேசங்களில் மாகாண சபையின் நிர்வாக கட்டமைப்பு இல்லாமையினால் பல்வேறு அரச நிறுவனங்களினால் காணி அபகரிப்புக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கும் வழிவகுக்கிறது என்பதும் முன்வைக்கப்பட்டது.
வட மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படாமல் இருக்கும் அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் மேச்சல் தரையான மாதவனை மயிலத்தமடு பிரதேசங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய மேய்ச்சல் தரையை அபகரித்து கால்நடை வளர்ப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் சூழ்நிலை நிலவுவது விளக்கப்பட்டது.
நாட்டின் தற்கால சூழலில் நடைபெறும் அரசியல் விடயங்களைப் பற்றி கலந்துரையாடிய வேளையில், அளவுக்கு அதிகமான வரிகளினாலும் கட்டுப்படுத்த முடியாத விலைவாசி உயர்வினாலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்கள் மாத்திரம் அல்ல மற்றவர்களும் வாழ்வாதார ரீதியாக கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதும் எடுத்துரைக்கப்பட்டது.
தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் கருதி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதையும், அதேபோன்று தமிழ் தேசிய பேரவையோடு இணைந்து செயல்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் பொது விடயங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதையும் விளக்கி கூறப்பட்டது.
கடந்த நாட்களில் தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுவது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதும் சுட்டி காட்டப்பட்டது.
புலம்பெயர் அமைப்புக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவாக தமிழ் தரப்புகளை ஒன்றிணைத்து செயலாற்றுகின்ற விடயமும் குறிப்பிடப்பட்டது.
இவற்றிற்கு பதில் அளித்த உயர் ஸ்தானிகர் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை மனித உரிமை பேரவையின் அறிக்கையிலே கூட சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கடந்த காலங்களில் பல்வேறு பெயர்களில் சமர்ப்பிக்கப்பட்ட வேளைகளிலும் நாங்கள் அவற்றை கவனமாக அவதானித்து வந்துள்ளோம்.
அதேபோன்று இந்த முறையும் இந்த சட்டத்தை பற்றி நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம் என்று தெரிவித்தாக கூறியுள்ளார்.








