இலங்கையின் மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அதிக முன்னுரிமை வழங்கி, டீசல் மற்றும் அனல் மின் உற்பத்தியில் தங்கியிருக்கும் நிலையை மாற்றியமைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாய்லாந்து அரசாங்கம் வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தியுள்ள மானியத் திட்டத்தைப் பாராட்டியுள்ள அவர், இலங்கையும் இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தனது X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சஜித் பிரேமதாச, தாய்லாந்தின் முன்னெடுப்பு எதிர்காலத்திற்கான சரியான பாதை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் அனல் மின் உற்பத்தித் துறையில் செல்வாக்கு செலுத்தும் குழுக்களின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணியக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டீசல் உள்ளிட்ட புதுப்பிக்க முடியாத எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின்சார உற்பத்தியை ஊக்குவிப்பதை நிறுத்தி, சூரிய மற்றும் ஏனைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தாய்லாந்து அரசாங்கம் வீடுகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளைப் பொருத்துவதற்காக 50 பில்லியன் பாட் நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 50,000 பாட் வரை மானியம் வழங்கப்படவுள்ளதுடன், ஒரு மில்லியன் குடும்பங்களுக்கு நன்மையளிப்பதே இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.
திட்டத்திற்கான இணையவழிப் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே 50,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்தின் இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி இலங்கையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை விரைவுபடுத்த வேண்டும் என்பதே சஜித் பிரேமதாசவின் பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.







