எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டிகளுக்கான சவாரிக் கட்டணங்களையும் உயர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது முதல் கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 110 ரூபாய் கட்டணத்தை 120 ரூபாயாகவும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் அறவிடப்படும் 90 ரூபாய் கட்டணத்தை 100 ரூபாயாகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த மாதத்தைப் போலவே இந்த மாதமும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும், இதனால் எரிபொருள் லீற்றர் ஒன்றின் விலை ஒட்டுமொத்தமாக 25 ரூபாயால் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்வுடன் அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதேவேளை, சந்தையில் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமங்கள் நிலவுவதால், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதற்கான பதிலை எதிர்வரும் சில நாட்களில் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால், கட்டண மீட்டர்களைத் திருத்தியமைக்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய செலவினங்களுடன் முச்சக்கர வண்டித் தொழிலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது கடினமாகியுள்ளதாகவும், உரிய தீர்வு கிடைக்காவிட்டால் இந்தத் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் எல். ரோஹண பெரேரா மேலும் வலியுறுத்தியுள்ளார்.








