இலங்கையில் யானைகள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்பில் மீண்டும் கவலைகள் எழுந்துள்ள நிலையில், அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பகுதியில் உள்ள வனப் பகுதியில் மற்றுமொரு யானை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவம் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுவதுடன், யானை கொல்லப்பட்ட பின்னர் அதன் தந்தங்களில் ஒன்று அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கொல்லப்பட்ட யானை, அப்பகுதியில் ‘லங்கேஸ்வர’ என அழைக்கப்படும் தந்தம் கொண்ட யானையாக இருக்கலாம் எனப் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், உயிரிழந்த யானையின் அடையாளம் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
அத்துடன், அரசாங்கத்தினால் விசேட பாதுகாப்பு வழங்குவதற்காக முன்னர் அடையாளம் காணப்பட்ட 13 யானைகளின் பட்டியலில் இந்த யானை உள்ளடங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இலங்கையில் எஞ்சியுள்ள தந்தம் கொண்ட யானைகளின் பாதுகாப்பு மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
எவ்வாறாயினும், உயிரிழந்த யானையின் அடையாளம் மற்றும் அதன் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பில் அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல்களை வெளியிடவில்லை.








