எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பேருந்து கட்டணத் திருத்தத்திற்கான விலைச் சூத்திரத்தின்படி, கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்குத் தேவையான 4 சதவீத எல்லையை தற்போதைய எரிபொருள் விலை உயர்வு எட்டவில்லை எனக் குறிப்பிட்டார்.
இதனால், தற்போதைய நிலையில் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு சட்டரீதியாக அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், எரிபொருள் விலை அதிகரிப்பினால் தனியார் பேருந்து சேவைகளை நஷ்டத்துடன் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்படி, குறுகிய தூரப் பேருந்து சேவைகளில் நாளொன்றுக்கு சுமார் 1,000 ரூபாவும், நீண்ட தூரப் பேருந்து சேவைகளில் நாளொன்றுக்கு சுமார் 2,000 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
டீசல் விலை 5 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும், அண்மைய விலை உயர்வுகளின் அடிப்படையில் டீசல் லீற்றரின் விலை மொத்தமாக 15 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார். இந்த விலை உயர்வு பேருந்து தொழில்துறைக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கட்டணத் திருத்தத்திற்கான விலைச் சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 4 சதவீத எல்லையை எட்டினால் மட்டுமே பேருந்து கட்டணங்களை அதிகரிக்க முடியும் என்பதால், தற்போதைய நிலையில் கட்டணங்களை உயர்த்த முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.








