அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்ற புதிய பயனாளர்களின் பெயர் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமக்கான தகுதி தொடர்பான விபரங்களைப் பயனாளர்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ அல்லது www.wbb.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவோ சரிபார்த்துக்கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வெளியிடப்பட்ட பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறாதவர்கள் அல்லது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனாளர் வகைப்பாட்டில் திருப்தியில்லாதவர்கள் மேன்முறையீடு செய்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தகுதியற்ற நபர்கள் பயனாளர்களாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கருதும் பொதுமக்களும் அதற்கு எதிராக ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026 நவம்பர் 11ஆம் திகதிக்குள் மேன்முறையீடு செய்பவர்கள் பிரதான விண்ணப்பத்துடன் A மற்றும் B படிவங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுமக்கள் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு C படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒருமுறை மாத்திரமே மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்படும். அதேநேரம், பொதுமக்கள் தங்களது பெயர்களைக் குறிப்பிடாமலும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.








