பணச் சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுடன் இணைத்துக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்டை, குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் அளவுக்குத் தேவையான மனநல நிலையில் டெய்சி ஃபாரஸ்ட் இல்லை என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்த பின்னரே நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பணச் சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தான் முற்றிலும் குற்றமற்றவர் என யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் திறந்த நீதிமன்ற அமர்வின்போது அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை மறுத்து தனது நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, டெய்சி ஃபாரஸ்ட் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.








