மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்குச் செவிசாய்த்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்படக்கூடிய அரசாங்க அதிபர் ஒருவர் மாவட்டத்திற்கு அவசியம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் சார்பாகச் செயற்படுவது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாக அமையும் எனவும், இவ்வாறான அணுகுமுறையைக் கொண்ட ஒருவர் மாவட்டத்தை நிர்வகிப்பதற்குப் பொருத்தமானவராக இருக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர், போராட்டக்காரர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாட முயற்சித்துள்ளார்.
எனினும், அரசாங்க அதிபரை நேரில் சந்திப்பதற்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை எனவும், நீண்ட நேரமாகத் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் கோரிக்கைகளை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்க அதிபரைப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருமாறு அழைத்தபோதும் அவர் அதற்கு இணங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறிப்பிட்ட சிலரை மாத்திரம் அலுவலகத்திற்குள் அனுமதிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பும் இடம்பெறவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்கள் மக்களின் போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு நேரடியாகச் செவிசாய்த்து, சம்பவ இடங்களுக்குச் சென்று பிரச்சினைகளைக் கேட்டறியும் நடைமுறை காணப்பட்டதாகவும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், மயிலத்தமடு, மாதவனை பகுதியில் சோமலிங்கம் என்பவர் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டதாகவும், பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிய அரசாங்க அதிபர் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளுடனும் ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடத் தயங்கும் அணுகுமுறையைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த ஞானமுத்து சிறிநேசன், மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு பாரபட்சமின்றிச் செயற்படக்கூடிய ஒருவரை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.








