நுவரெலியா, மீபிலிமான பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர் விஷவாயுவைச் சுவாசித்ததால் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஆணும், 46 வயதுடைய பெண்ணும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த தம்பதியினர் மீபிலிமான பகுதியில் சுற்றுலா விடுதியொன்றின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை, குறித்த விடுதிக்கு அருகிலுள்ள வாடகை வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்ததாக நுவரெலியா பிராந்தியத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தன பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ஆண் கப்பல் மாலுமியாக (Captain) பணியாற்றியவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நுவரெலியா பகுதியில் நிலவும் கடும் குளிரிலிருந்து தப்புவதற்காக BBQ அடுப்பை எரியவைத்து அறைக்குள் வைத்துவிட்டு இருவரும் உறங்கச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை உறவினர்கள் தொலைபேசி மூலம் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும் இருவரிடமிருந்தும் பதில் கிடைக்காததால், அப்பகுதி கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கிராம உத்தியோகத்தர் வீட்டைச் சோதனையிட்டபோது தம்பதியினர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








