யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதையில் பேருந்தைச் செலுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சாரதி, ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் பரிசோதனையில் போதைப்பொருள் பாவித்தமைக்கான அறிகுறிகள் தென்பட்டிருக்கலாம் என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்துறைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதி, கடந்த வெள்ளிக்கிழமை போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவர், செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சாரதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் போதைப்பொருள் பாவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், அதற்கான மருத்துவ அறிக்கை, ஆயுள்வேத வைத்தியரின் உறுதிப்படுத்தல் கடிதம் மற்றும் பயன்படுத்தும் மருந்துகள் தொடர்பான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பிணை கோரினார்.
இதனையடுத்து, சாரதியை இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது.







