நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகத் தடையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மூன்று எரிவாயு கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முதலாவது கப்பல் நவம்பர் 12 முதல் 14ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், இரண்டாவது கப்பல் நவம்பர் 15 முதல் 17ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தையும் வந்தடையவுள்ளன.
மூன்றாவது கப்பல் நவம்பர் 24 முதல் 28ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையுமென நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள தனது எல்பிஜி முனையத்தின் ஊடாக உள்நாட்டுச் சந்தைக்கு எரிவாயுவை விநியோகிப்பதற்குத் தேவையான அனுமதிகளைப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய எரிவாயு விநியோகத் தடையினால் பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டு நுகர்வோர் மற்றும் வர்த்தகத் துறையினருக்கு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், விநியோகத்தை விரைவில் வழமைக்குக் கொண்டுவருவதற்கும் நீண்டகால விநியோக நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.








