பொலிஸார் இழைக்கும் குற்றச் செயல்கள் தொடர்பில் வடக்கிலும் தெற்கிலும் சட்டம் இருவேறு விதமாக நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழ் சிறுவனின் தாயாரொருவர் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
“எனது மகன் உயிரிழந்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. வேறு குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், மகனைக் கொன்றவரை மாத்திரம் ஏன் கைது செய்யவில்லை? அதற்குள் இருக்கும் இரகசியம் என்ன? இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து எனக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. எனது மகனைக் கொன்றவருக்கு சட்டப்படி தண்டனை வழங்குங்கள். எனது மகன் வாழ வேண்டிய ஒருவர்.”
2026 பெப்ரவரி 10ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சித்தன்கேணியைச் சேர்ந்த எல்பினோ அயுப்ராஜ் அருள் பயஸின் வழக்கு விசாரணை, 2026 நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதனையடுத்து, எல்பினோ ஜானகி என்ற தாயார் பிராந்திய ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அருள் பயஸின் கொலைக்கு மறுநாள், பெப்ரவரி 10ஆம் திகதி பொலிஸார் வேன் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 19 வயது நபர் உயிரிழந்ததாக பொலிஸார் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், உயிரிழந்த சித்தன்கேணியைச் சேர்ந்த எல்பினோ அயுப்ராஜ் அருள் பயஸ் 2008 நவம்பர் 9ஆம் திகதி பிறந்தவர் என அவரது பிறப்புச் சான்றிதழ் அதேபோன்று மரண பரிசோதனை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 வயதுடைய எஅல்பினோ அருள் பயஸின் மரணத்திற்கு, “ரைபிள் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு மூளையைச் சிதைத்தமையே” காரணம் என, விசேட சட்ட வைத்திய அதிகாரி ருத்ரபசுபதி மயூரதரன், 2026 பெப்ரவரி 10ஆம் திகதி நீதவான் M.N.N. ஹுசைனுக்கு அனுப்பிய மரண பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அண்மையில் ஹோமாகம பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையின் கொலை தொடர்பில் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மறுநாளே கைது செய்யப்பட்டார். ஆனால், ஒன்பது மாதங்கள் கடந்தும் தனது மகனின் கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டிய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை என்பது தொடர்பில் அருள் பயஸின் தாயார் கவலை வெளியிட்டுள்ளார்.
“29 வயதான இளைஞரை கொழும்பில் கொலை செய்த OIC-ஐ மறுநாளே கைது செய்தார்கள். ஆனால், எனது மகனைக் கொன்றவரை ஏன் இதுவரை கைது செய்யாமல் வைத்திருக்கிறார்கள்? இதில் இருக்கும் நியாயம் என்ன?”

அருள் பயஸை பொலிஸார் வீதியில் வைத்து சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில், ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் திருப்தியடையாத ஊர்காவற்துறை நீதவான் நளினி சுபாஸ்கரன், அந்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு 2026 மார்ச் 12ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.
கொலைச் சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் கடந்த பின்னரும், கொலைச் செய்த பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் பீ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்பதும், துப்பாக்கி குண்டுகளின் வெற்றுக் கூடுகளைக்கூட பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும், இந்த விசாரணை எந்தளவுக்குப் பலவீனமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாக ஆறு பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழு, கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
எவ்வாறாயினும் மாரசிங்க மற்றும் சல்மான் ஆகிய பொலிஸ் கான்ஸ்டபிள்களின் துப்பாக்கிகளிலிருந்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டு, மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி 2026 பெப்ரவரி 10ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி குமரவடிவேல் குருபரன் கடந்த மார்ச் மாதம் பிராந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
சித்தன்கேணியைச் சேர்ந்த எல்பினோ அயுப்ராஜ் அருள் பயஸின் வழக்கு விசாரணை, 2026 நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தினத்திலாவது, தனது மகனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என தாயார் குறிப்பிட்டார்.
“வழக்கு விசாரணை நடைபெற்றது. எனது மகனின் மரண பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூட CID யிலிருந்து வந்தவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் ஆரம்பத்தில் என்ன நடந்தது என்பது பற்றித்தான் கேட்டுக்கொண்டு இருந்தார்களே தவிர, துப்பாக்ச் சூடு நடத்தியவர்களை சந்தேகநபர்களாக அழைத்து வந்து முன்னிலைப்படுத்தவும் இல்லை. இது தொடர்பில் எதுவுமே பேசவுமில்லை. சம்பவத்தின்போது உடனிருந்த சாட்சியாளர்கள், உடனிருந்த சாட்சியாளர்கள் எனக் கூறிக்கொண்டிருக்கிறார்களே தவிர, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இல்லை. மென்மேலும் பொலிஸார் எமக்கு தான் தொந்தரவு கொடுக்கின்றார்கள். எங்களது வீட்டிற்கு தான் வருகிறார்கள், தெரியாத நபர்களைப் போல வந்து எங்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றார்கள். எஞ்சி இருக்கும் எனது ஏனைய பிள்ளைகளுக்கும் இதனால் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை. எதற்காக அவர்களை காப்பாற்றுகிறார்கள் என எனக்கு புரியவில்லை.” என எல்பினோ ஜானகி தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காக ‘கள்ள பொலிஸார்’ தனது மகனை அவமதிக்கும் வகையில் செயற்படுவதாக, தனது மகனுக்கு நீதி கோரி கடந்த பத்து மாதங்களாகப் போராடி வரும் அருள் பயஸின் தாய் குறிப்பிட்டுள்ளார்.
“எனது மகனை அவமதிக்கும் வகையிலான பெயர்களைக் கூறுகின்றனர். கஞ்சா வியாபாரம் செய்தார், அது செய்தார், இது செய்தார் என கூறுகிறார்கள். அவரது தாய் என்ற முறையில் கூறுகின்றேன். அவர்கள் கூறும் விடயங்கள் பொய்யானவை. கள்ள பொலிஸார், அவர்களை காப்பாற்றுவதற்காக பொய்யான வழக்குகளைப் புனைந்து வருகின்றனர். எனது மகனுக்கு நீதி கிடைக்கச் செய்யுங்கள்.
17 வயதுடைய சிறுவனின் கொலைக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளைக் கைது செய்யத் தவறியதை கண்டித்து, அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கடந்த சுமார் 10 மாத காலப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் அல்லைப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.







