அம்பாறை, சம்மாந்துறையில் கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு இளைஞர்களையும் எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகில் கடந்த 3ஆம் திகதி இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை சோதனையிட முற்பட்ட போக்குவரத்துப் பொலிஸாரை மோதிவிட்டு அவர்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதையடுத்து, காயமடைந்த நிலையில் இருவரையும் பொலிஸார் கைது செய்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 17 வயதுடைய சந்தேகநபர்கள் சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இருவரும் மட்டக்களப்பு கும்புறுமூலை சிறுவர் காப்பகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.








