மின்னேரியா – ஹபரணை பிரதான வீதியில் இடம்பெற்ற கார் மற்றும் டிப்பர் லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில், பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்த வைத்தியர் ரோஹண கமகே உயிரிழந்துள்ளார்.
ஹபரணை தேவஸ்தானத்திற்கு அருகில் நேற்று (06) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தனது பிறந்தநாளை முன்னிட்டு மாத்தளை வைத்தியசாலை ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, பொலன்னறுவையிலிருந்து மாத்தளை நோக்கித் தனது காரில் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்தபோதே அவர் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் சேவையாற்றிய வைத்தியர் ரோஹண கமகே, அண்மையில் பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று தனது சேவையைத் தொடர்ந்து வந்துள்ளார்.
அறுவை சிகிச்சைத் துறையில் சிறந்த சேவையாற்றியதுடன், நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மனிதநேயமிக்க வைத்தியராகவும் அவர் பலராலும் நினைவுகூரப்படுகிறார்.
அவரது மறைவு மருத்துவத்துறையினருக்கும், அவருடன் பணியாற்றியவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








