மக்களின் கருத்துக்களையும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் நிலைப்பாடுகளையும் கேட்டறியாமல், முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலங்களைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (07) சனிக்கிழமை நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (Protection of the State from Terrorism Bill) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலம் (Prevention of Organised Crimes Bill) ஆகியவை தொடர்பில் எழுந்துள்ள எதிர்ப்புகள் மற்றும் சந்தேகங்களைக் கவனத்தில் கொண்டு, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இது தொடர்பான தீர்மானம் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்டதாகவும், சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட எதிர்ப்புத் தெரிவிக்கும் தரப்பினரின் கருத்துக்களுக்கும் அரசாங்கம் உரிய இடமளிக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைப் பயன்படுத்தி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கம் தமக்கு இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, தேர்தல் மூலம் மக்கள் தமது அரசாங்கத்தை நிராகரிக்கத் தீர்மானித்தால், அந்த ஜனநாயகத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு ஆட்சியிலிருந்து வெளியேறத் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
குறித்த சட்டமூலங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரங்களைப் பாதிக்கக்கூடும் எனத் தெரிவித்து, எதிர்க்கட்சிகள், சட்டத்தரணிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, குறித்த சட்டமூலங்களை மீளப்பெறுமாறு வலியுறுத்தி கொழும்பில் எதிர்ப்புப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







