போதைப்பொருட்களைப் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறியதாகக் கூறி, வெல்லம்பிட்டிய பகுதியில் முச்சக்கரவண்டி சாரதிகளைப் பொலிஸார் துன்புறுத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஓபியம், கஞ்சா, பார்பிடியூரேட்ஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கையை வைத்திருக்கவில்லை என்ற காரணத்தினால், சாரதிகள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அண்மையில் வெல்லம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களில், மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறிய இரு முச்சக்கரவண்டி சாரதிகள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, வாய்மொழி ரீதியான துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், தாம் நிரபராதி என்பதை எடுத்துரைக்க முயன்றபோது பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னை அறைந்ததாகவும், மற்றொரு சந்தர்ப்பத்தில் 10 மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் சாரதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பெயர் குறிப்பிட விரும்பாத முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தெரிவிக்கையில்,
தான் வாடகைப் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது இடைமறிக்கப்பட்டதாகவும், பயணியை வேறு வாகனத்தில் செல்லுமாறு கூறிவிட்டு தன்னைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.
தனது சிறுநீர் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்புவதில் பொலிஸார் தாமதம் காட்டியதால், மாலை 5 மணி வரை பொலிஸ் நிலையத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளாந்த வருமானத்தை நம்பி வாழும் தங்களைப் போன்ற சாரதிகளுக்கு இத்தகைய நடவடிக்கைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனக் கூறியபோது, பொலிஸார் தங்களை அறைந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு முச்சக்கரவண்டி சாரதியான கே.ஏ.ஐ. சமிக்க தெரிவிக்கையில், முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் வாடகை மோட்டார் சைக்கிள் சாரதிகள் மாத்திரமே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அடிக்கடி முகங்கொடுப்பதாகக் குறிப்பிட்டார்.
சாரதிகளின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சந்தேகத்தின் பேரில் வாகனங்கள் இடைமறிக்கப்படுவதாகவும், பயணத்தில் இருக்கும்போதுகூட பயணிகளை இறக்கிவிட்டு சாரதிகளைப் பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதனால் தமது அன்றாட வருமானம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேசிய வீதி பாதுகாப்புச் சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன, முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நாடளாவிய ரீதியில் அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் காணப்படும் பட்சத்தில், அவரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தடுத்து வைத்திருக்கப் பொலிஸாருக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், குறித்த மருத்துவ அறிக்கையை சாரதிகள் எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதேவேளை, இது தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் வினவியபோது, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) தம்மிக்க கரியவசத்தை நேரில் சந்தித்து விளக்கம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.








