செனகலின் வடமேற்குப் பகுதியில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கடலில் கவிழ்ந்ததில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்தி முகமையான APS தெரிவித்துள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செனகல் உள்துறை அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (08) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை மனித உரிமைகள் மற்றும் நட்புறவுக்கான நடவடிக்கை (ADHA) அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
டாக்கார் நகருக்கும் அதற்கு வடக்கே அமைந்துள்ள செயிண்ட்-லூயிஸ் நகருக்கும் இடைப்பட்ட கெபெமர் மாகாணத்தின் லூம்பூல் மணல் குன்றுகளுக்கு அருகே, கடந்த சனிக்கிழமை (07) இந்தப் படகு விபத்துக்குள்ளானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அதே மாகாணத்தைச் சேர்ந்த லியோனா மற்றும் தியெப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ‘லெ சோலெய்ல்’ செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோர் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்காகச் செயற்படும் ‘வாக்கிங் பார்டர்ஸ்’ அமைப்பின் தகவலின்படி, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 635 பேர் இவ்வாறான பயணங்களின்போது உயிரிழந்துள்ளனர்.
மேலும், கேனரி தீவுகளுக்கு புலம்பெயர்ந்தோர் வருகை அதிகரித்துள்ள நிலையில், எல் ஹியரோ தீவில் ஸ்பெயின் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை அவசரநிலையை அறிவித்துள்ளனர்.
நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து சுமார் 30 படகுகள் மூலம் 3,300-க்கும் அதிகமானோர் அங்கு வந்தடைந்துள்ளதாக எல் ஹியரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







