சவூதி அரேபியாவில் இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பிய 33 வயதுடைய பெண்ணொருவர், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நண்பியொருவரின் பொதியொன்றை ஒப்படைப்பதற்காகச் சென்ற பெண்ணுக்கு, வாடகை வாகனச் சாரதியும் அவருடன் தொடர்புடையவர்களும் போதைப்பொருள் கலந்த பானத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த பெண்ணைத் தாக்கி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதுடன், அவரிடமிருந்த 13 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தையும் கொள்ளையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் மயக்கமடைந்த நிலையில் பெண் கைவிடப்பட்டுள்ளார். அவரை மீட்ட பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பெண்ணுக்கு நினைவு திரும்பிய பின்னர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் வழிகாட்டலில் முல்லைத்தீவு பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







