2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் அடங்கிய இறுதி ஆவணத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் பார்வையிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
டித்வா பேரழிவு மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடிகள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும், முறையான நிர்வாகம் மற்றும் நிதி ஒழுக்கத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதுடன், பொருளாதார விரிவாக்கம் மற்றும் கட்டமைப்பு ரீதியான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் 2,000 பில்லியன் ரூபா மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாளை (12) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.







