இலங்கையில் ஆளில்லா பயணிகள் போக்குவரத்து ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாக, அதன் முதலாவது உத்தியோகபூர்வ சோதனை ஓட்டம் இன்று (11) கொழும்பு துறைமுக நகரில் முன்னெடுக்கப்படவுள்ளது.
சீனாவின் Yi Hang நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் eVTOL வகையைச் சேர்ந்த நவீன பயணிகள் ட்ரோன் விமானங்கள் இந்தச் சோதனை நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்படவுள்ளன.
வழக்கமான விமானங்களைப் போன்று ஓடுதளம் தேவைப்படாமல், செங்குத்தாக மேலெழும்பி தரையிறங்கக்கூடிய இந்த விமானங்களைப் பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாத்துறை மற்றும் அவசர சேவைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பில் ஏற்கனவே விசேட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, ஆரம்பகட்டத்தில் வணிக ரீதியிலான சேவையாக அல்லாமல், முன்னோடிப் பரீட்சார்த்தத் திட்டமாகவே இச்சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சுமார் ஆறு மாத காலத்திற்கு கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சோதனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக இரண்டு பயணிகள் பயணிக்கக்கூடிய E216 ரக ட்ரோன் விமானம் ஒன்று அண்மையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
16 சுழலிகள், 12 மின்கலத் தொகுதிகள் மற்றும் மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டுள்ள இந்த விமானம், கணினி தொழில்நுட்பத்தின் ஊடாக முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரே கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தொலைதூரத்தில் விமானத்தை இயக்கும் வசதியும் இதில் காணப்படுவதுடன், அவசரநிலை அல்லது தொடர்பாடல் துண்டிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் தானியங்கி பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மாறும் தொழில்நுட்ப வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப்படை உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
எதிர்காலத்தில் இச்சேவை விரிவுபடுத்தப்படும் பட்சத்தில், சீகிரியா, பிதுரங்கலை மற்றும் தீவுப் பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வான்வழியாகப் பயணிகளை அழைத்துச் செல்வதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், இலங்கையின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையில் புதிய தொழில்நுட்பப் புரட்சிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







