2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, நாடு முழுவதும் உள்ள பொதுச் சேவைப் பொறியியலாளர்கள் இன்று (13) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இலங்கை பொறியியல் சேவை அதிகாரிகள் சங்கத்தினால் இந்த வேலைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் பொறியியல் சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த களப்பயணம் மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவு 2024ஆம் ஆண்டு குறைக்கப்பட்டது.
குறைக்கப்பட்ட இந்தக் கொடுப்பனவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே பொறியியலாளர்களின் பிரதான கோரிக்கையாகும்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக குறித்த கொடுப்பனவை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்ததாகவும், எனினும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அடுத்த ஆண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், பொதுச் சேவைப் பொறியியல் அதிகாரிகளின் கோரிக்கைகள் வரவு செலவுத் திட்டத்தில் கவனத்தில் கொள்ளப்படாமை ஏமாற்றமளிப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, இன்று சுகவீன விடுமுறையை அறிவித்து நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் ஆரம்பகட்ட நடவடிக்கை மாத்திரமே எனத் தெரிவித்துள்ள சங்கம், தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் விரைவான தீர்வை வழங்கத் தவறினால், எதிர்காலத்தில் தொடர்ச்சியான மற்றும் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகளால் அபிவிருத்தித் திட்டங்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.







