செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொழும்பு நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகச் சித்தரிக்கும் போலியான காணொளிகளை உருவாக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற கொழும்பு மாநகர சபையின் அமர்வில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 6ஆம் திகதி கொழும்பில் பெய்த கடும் மழையினால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியமை தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்போது பேசிய மேயர், One Galle Face வணிக வளாகம் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைப் போன்ற காணொளியொன்றை சமூக வலைத்தளங்களில் பார்வையிட்டதாகத் தெரிவித்தார்.
எனினும், குறித்த காணொளி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தான் குளமொன்றில் இறங்கி நீராடுவது போன்ற காட்சிகளும் சித்தரிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான போலியான காணொளிகளை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் மேயர் தெரிவித்தார்.
மேலும், மழை மற்றும் வெள்ள நிலைமைகளைப் பயன்படுத்தி அரசியல் ரீதியான சர்ச்சைகளையும் அலைகளையும் உருவாக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.







