சுமார் 2 கோடியே 45 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த குற்றச்சாட்டில், 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த தனியார் பாடசாலை ஆசிரியை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அவரது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறிய பணப்பைகளிலிருந்து 436 கிராம் நிறையுடைய நான்கு தங்க பிஸ்கட்டுகளும், மற்றுமொரு தங்க பிஸ்கட்டின் ஒரு துண்டும் மீட்கப்பட்டுள்ளன.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, மீட்கப்பட்ட தங்கம் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரான பெண்ணுக்கு 25 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.







