நாட்டில் 80,000க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் காணப்படும் நிலையில், அரசாங்கம் தொடர்ச்சியாகப் பட்டதாரிகளை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறுவது எவ்வாறு சாத்தியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (14) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தகவல்களின்படி, உயர்கல்வியைப் பூர்த்தி செய்தவர்களிடையே தெற்காசியாவிலேயே அதிகூடிய வேலையின்மை வீதமான 43 சதவீதம் இலங்கையில் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகப் பணியாற்றும் பலர் பல தசாப்தங்களாகக் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தும், இதுவரை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக இணைத்துக்கொள்ளப்படாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு என்பது மனித அபிவிருத்திச் சுட்டெண்ணின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். வேலைவாய்ப்பின் மூலம் கிடைக்கும் வருமானம் ஏனைய அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு உதவுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வேலையற்ற நிலையில் உள்ள 80,000க்கும் அதிகமான பட்டதாரிகளையும் பயிலுநர்களாக அரச சேவையில் இணைத்துக்கொண்டு, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற மாதாந்த கொடுப்பனவை வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அவரவர் கல்வித் தகைமைகள் மற்றும் துறைசார் திறமைகளை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மூன்று தேர்தல்களிலும் தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேலையற்ற பட்டதாரிகள் முக்கிய பங்காற்றியதாகக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பிலேயே அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, குறைந்தபட்சம் அவர்களுக்குப் பயிலுநர் நியமனங்களையாவது வழங்கி, உரிய பயிற்சிகளின் பின்னர் அரச சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.







