தாம் மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் எண்ணம் எதுவும் இல்லை என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரசியல் வாழ்க்கையிலிருந்து முழுமையாக விலகிவிட்டதாகவும், தற்போது பெருநிறுவனத் துறையில் முன்னெடுத்து வரும் தொழில்முறைப் பணிகளில் திருப்தியுடன் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த தேர்தல் முடிவுகள் தாம் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்றாலும், தேர்தலில் போட்டியிட்டமை தனது வாழ்க்கையில் முக்கியமானதொரு அனுபவமாக அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேர்தல் நிறைவடைந்த ஒரு மாத காலத்திற்குள் தனது அரசியல் ஈடுபாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுச் சேவையில் ஈடுபட்டிருந்த காலத்தில் தனக்கு ஆதரவளித்தவர்கள், வழிகாட்டியவர்கள் மற்றும் தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டுக்காகத் தன்னால் ஆற்ற முடிந்த பங்களிப்புகள் குறித்து பெருமையடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் இருந்து பெருநிறுவனத் துறைக்கு மாறி 23 மாதங்கள் கடந்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஆரம்பத்தில் பகுதி நேரமாக முன்னெடுத்த பணிகள் தற்போது முழுநேரத் தொழில்முறைப் பணியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம் தனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிடவும், உடற்பயிற்சி மற்றும் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும், பயணங்களை மேற்கொள்ளவும், தனிப்பட்ட ஆர்வங்களை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிய தொழில்முறைப் பயணத்தின் ஊடாகப் பல்வேறு தொழில்துறைகள் தொடர்பான அறிவையும் அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள முடிவதாகவும் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.







