திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீன் வழங்கிய சட்டபூர்வ பிடியாணை உத்தரவை விமர்சித்து, நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் பலாங்கொடை கஸ்ஸப்ப தேரரின் நடவடிக்கைக்கு எதிராக திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (13) காலை திருகோணமலை நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, நீதித்துறையின் சுயாதீனத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சட்டத்தரணிகள், நீதிமன்ற நடவடிக்கைகளில் எவ்வித வெளிப்புற அழுத்தங்களும் தலையீடுகளும் இருக்கக்கூடாது எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் கிளைத் தலைவர், நீதித்துறை எவ்வித அழுத்தங்களுக்கும் உட்படாமல் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயற்படுவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நீதித்துறையின் சுதந்திரத்தையும் நீதிமன்றங்களின் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.







