யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், சுமார் ஆறு இலட்சம் மக்கள் தொகையில் இரண்டு இலட்சம் பேர் வரை இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமரன் தெரிவித்துள்ளார்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நேற்று (14) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீரிழிவு நோய் ஆரம்பத்தில் வெளிப்படையான அறிகுறிகள் இன்றி உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதிக்கக்கூடியதால், இது ஒரு ‘மௌனக் கொல்லி’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்நோயைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் மட்டுமன்றி சமூக அமைப்புகள், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.







