இலங்கை அரசாங்கத்தின் வரியல்லா வருமானம் 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 39.1 சதவீதத்தால் அதிகரித்து 314.8 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 226.2 பில்லியன் ரூபாவாக இருந்த வருமானமே இவ்வாறு அதிகரித்துள்ளதாக 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், பொருளாதார மற்றும் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் வரியல்லா வருமானம் 7.9 சதவீதமாகக் காணப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியிடமிருந்து கிடைத்த 42.1 பில்லியன் ரூபா இலாபப் பரிமாற்றம் உள்ளிட்ட இலாபப் பங்குகள், வாடகை, அபராதங்கள், கட்டணங்கள், வட்டி வருமானம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புகள் அதிகரித்தமையே இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன.
இதன்படி, அபராதங்கள் மற்றும் கட்டணங்கள் மூலம் கிடைத்த வருமானம் 18.7 சதவீதத்தால் அதிகரித்து 133.6 பில்லியன் ரூபாவாகவும், சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புகள் மூலம் கிடைத்த வருமானம் 45.3 பில்லியன் ரூபாவாகவும் உயர்ந்துள்ளன.
மேலும், அரச நிறுவனங்களின் இலாபப் பங்குகள் மூலம் கிடைத்த வருமானம் 36 சதவீதத்தால் அதிகரித்து 19.9 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
2026ஆம் ஆண்டுக்காக வரியல்லா வருமானமாக 360 பில்லியன் ரூபாவைத் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் எட்டு மாதங்களிலேயே அந்த இலக்கில் 87.4 சதவீதத்தை அரசாங்கம் எட்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.







