2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தனியார் பஸ் தொழில்துறைக்கு எவ்வித நிதி ஒதுக்கீடுகளோ அல்லது வரிச் சலுகைகளோ வழங்கப்படவில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்தின தெரிவித்துள்ளார்.
இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய உற்பத்தியில் 11 முதல் 12 சதவீதம் வரை பங்களிப்பு வழங்கும் தனியார் பஸ் தொழில்துறைக்கு குறைந்தபட்சம் பெறுமதி சேர் வரி (VAT) சலுகையையாவது அரசாங்கம் வழங்கியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரச போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதற்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பஸ்களை இறக்குமதி செய்யும்போது அதிகளவிலான வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளதால், தொழில்துறையினர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும், தனியார் பஸ் தொழில்துறை தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







