இலங்கையில் குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே உயிருடன் பிறந்துள்ளனர்.
2019ஆம் ஆண்டில் 319,010 ஆகப் பதிவான உயிருடன் பிறப்புகளின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டில் 214,570 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 33 சதவீத வீழ்ச்சியாகும்.
திருமணங்கள் தாமதமடைதல், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, இளைஞர்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு, சிறிய குடும்பங்களை விரும்புதல், பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பங்கேற்பு அதிகரித்தல் உள்ளிட்ட பல காரணிகள் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் ஊக்கத்தொகைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கையில் முதலாம் தரத்திற்கு ஆண்டுதோறும் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் சுமார் 40,000 பேரால் குறைந்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி, எதிர்காலத்தில் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி, பாடசாலை மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித்துறைத் திட்டமிடலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.







