தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் இன்று (17) மேலும் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 19ஆம் திகதி மிகக் கடுமையான புயலாக வலுவடையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நகரும் புயல், நவம்பர் 20ஆம் திகதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானாம் கடற்கரைப் பகுதியில் நெல்லூர் – துனி இடையே கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







