2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (18) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ருஹுணு பல்கலைக்கழகத்தைத் தவிர நாட்டின் ஏனைய அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் இடம்பெறுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் தம்மிக எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தின் முதல் வரவு செலவுத் திட்டத்திலேயே பல்கலைக்கழகக் கட்டமைப்புக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், அப்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்பட்ட உறுதிமொழிகள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் நிறைவேற்றப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மாறாக, பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதன் காரணமாகவே இன்று நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்புடன் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ருஹுணு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதால், அந்தப் பல்கலைக்கழகம் மட்டும் போராட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், பல்கலைக்கழகங்களின் முன்பாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன், கொழும்பிலுள்ள பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண அரசாங்கம் தலையிட வேண்டும் என வலியுறுத்திய அவர், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனினும், இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமது கோரிக்கைகளுக்கான நிதி நிவாரணமாக ஒரு சதம் கூட இதுவரை வழங்கப்படவில்லை என தம்மிக எஸ். பிரியந்த மேலும் தெரிவித்துள்ளார்.







