லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயுவைப் பயன்படுத்தும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் கொத்து மற்றும் ரைஸ் வகைகளின் விலைகளை 10 ரூபாவாலும், சிற்றுண்டி வகைகளின் விலைகளை 2 ரூபாய் 50 சதத்தாலும் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விலைக் குறைப்பு இன்று (17) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனைப் பயன்படுத்தும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகளையும் உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, கொத்து மற்றும் ரைஸ் வகைகளின் விலைகள் தலா 15 ரூபாவாலும், சிற்றுண்டி வகைகளின் விலைகள் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வர்த்தக அமைச்சரின் தலையீட்டையடுத்து லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, எரிவாயு விலைக் குறைப்பின் நன்மையை நுகர்வோருக்கும் வழங்கும் நோக்கில் உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்படுவதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.







