உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அஸ்வெசும நலன்புரிப் பயனாளர்களுக்கான மூலதன உதவித் தொகையை அதிகரிக்கவும், பயனாளர் குடும்பங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் அதிகபட்ச மூலதன உதவித் தொகை ரூ.150,000 இலிருந்து ரூ.200,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன் அஸ்வெசும பயனாளர்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, கடந்த 2025 ஒக்டோபர் 13ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதன் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவித் திட்டத்தின் ஊடாக 8,660 குடும்பங்களுக்கு ஏற்கனவே மூலதன உதவி வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த திட்டம் நிறைவடைந்துள்ளது.
அதேவேளை, உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் முதலாம் கட்டத்தில், 7 மாவட்டங்களைச் சேர்ந்த 4,900 குடும்பங்களுக்கு மூலதன உதவி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தில், 5 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் 6,600 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலாம் கட்டச் செயற்பாடுகளின் அனுபவங்களைக் கருத்திற்கொண்டு, திட்டத்தின் தரத்தைப் பாதிக்காமல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிக்கவும், மொத்தப் பயனாளர் குடும்பங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும் உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் பயனாளர் குடும்பங்களின் இலக்கு எண்ணிக்கை 10,975 இலிருந்து 11,500 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமுதாய வலுவூட்டல் அமைச்சர் முன்வைத்த இந்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.








