மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலம் வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்துள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் 1977ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ‘வொயேஜர்-1’ (Voyager 1) விண்கலமே இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
வியாழன் (Jupiter), சனி (Saturn) கோள்களை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்த விண்கலம், சுமார் 49 ஆண்டுகளாக விண்வெளியில் பயணித்து வருகிறது. இன்று (18) பூமியிலிருந்து சுமார் 2,590 கோடி கிலோமீற்றர் தொலைவைக் கடந்து, ஒரு ஒளி நாள் (Light-day) தூரத்தை எட்டியுள்ளது.
ஒளி ஒரு நாளில் கடக்கும் தூரமே ஒரு ஒளி நாள் எனப்படுகிறது. இதன்படி, பூமியிலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞை வொயேஜர்-1 விண்கலத்தைச் சென்றடைய சுமார் 24 மணித்தியாலங்களும், அங்கிருந்து பதில் பூமியை வந்தடைய மேலும் 24 மணித்தியாலங்களும் தேவைப்படும். அதாவது, ஒரு தகவலை அனுப்பிப் பதிலைப் பெற சுமார் இரண்டு நாட்கள் ஆகும்.

புளூட்டோனியம்-238 மூலம் மின்சாரம் பெறும் இந்த விண்கலத்தின் மின்சக்தி படிப்படியாகக் குறைந்து வருவதால், அதன் சில கருவிகளை நாசா ஏற்கனவே நிறுத்தி வருகிறது. இதனால், 2030ஆம் ஆண்டளவில் பூமியுடனான அதன் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அதன் விண்வெளிப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும். சுமார் 40,000 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘ஏசி+79 3888’ (AC+79 3888) என்ற நட்சத்திரத்தின் அருகே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விண்கலத்தின் மற்றுமொரு சிறப்பம்சம், அதில் பொருத்தப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட ‘கோல்டன் ரெக்கார்ட்’ (Golden Record) ஆகும். 12 அங்குல விட்டமுடைய இந்த வட்டில் பூமியின் இயற்கை ஒலிகள், பறவைகளின் சத்தங்கள், 55 மொழிகளில் வாழ்த்துச் செய்திகள் (தமிழ் உட்பட) மற்றும் 115 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
வானியலாளர் கார்ல் சேகன் தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்ட இந்தப் பதிவு, எதிர்காலத்தில் ஏதேனும் அறிவார்ந்த வேற்றுக்கிரக உயிரினங்கள் இந்த விண்கலத்தைக் கண்டறிந்தால், பூமி, மனிதர்கள் மற்றும் நமது கலாசாரத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கான ஒரு தகவல் பெட்டகமாக அமைக்கப்பட்டுள்ளது.







