தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை சமர்ப்பித்துள்ள மூன்று வரவு செலவுத் திட்டங்களிலும் மக்களுக்கு தாராளமாக நிவாரணங்களை வழங்கும் கலாசாரத்தை உருவாக்கியுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ஜனாதிபதி ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த வரவு செலவுத் திட்டம் முழுவதும் சாதாரண மக்களுக்கு எவ்வாறு நிவாரணங்களை வழங்குவது என்பதே முக்கியமாக இருந்தது.
கடந்த காலத்தில் சாதாரண மக்களுக்கு சிறிய கரண்டியால் நிவாரணங்களை வழங்கிவிட்டு, உயர் வர்க்கத்தினருக்கும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் பக்கோ இயந்திரங்களால் சலுகைகளை வாரி வழங்கும் கலாசாரத்தையே நாம் கண்டோம்.
தற்போது அந்த அரசியல் கலாசாரம் மாற்றமடைந்துள்ளது. நாம் சமர்ப்பித்த மூன்று வரவு செலவுத் திட்டங்களிலும் மக்களுக்கு பக்கோ இயந்திரங்களால் நிவாரணங்களை வழங்கும் கலாசாரத்தை உருவாக்கியுள்ளோம்.
எமக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியத்தைக்கூட இரத்துச் செய்துகொண்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வரவு செலவுத் திட்டத்தையே இம்முறையும் சமர்ப்பித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.







