மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக 2017ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது இனப்படுகொலை இடம்பெற்றதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வடக்கு ரக்கைன் மாகாணத்தில் மியான்மர் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகளின்போது ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், மியான்மர் அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டும் வகையில் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றத் தலைவர் யூஜி இவாசாவா தலைமையிலான 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு, விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை ஆராய்ந்துள்ளது.
இதன்போது, ரோஹிங்கியா மக்களுக்கு எதிராகப் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம் பெண்களுக்கு எதிராகப் பரவலான பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களின் இனப்பெருக்கத் திறனைப் பாதிக்கும் வகையிலான கொடுமைகளும் இடம்பெற்றதாகத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இராணுவ நடவடிக்கைகளின்போது உயிர் அச்சுறுத்தல் காரணமாகப் பெருமளவிலான ரோஹிங்கியா மக்கள் அண்டை நாடான வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்ற நிலையில், அவர்களைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான இந்த வழக்கு, சர்வதேச அளவில் இனப்படுகொலை மற்றும் அரசுகளின் பொறுப்புக்கூறல் குறித்த விவாதங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.







