காலி – ஹிக்கடுவைப் பகுதியில் ஏற்பட்ட பணப் பிரச்சினை காரணமாக இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளதுடன், இதில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞருக்கும் அவரது நண்பரான 29 வயதுடைய மற்றொரு இளைஞருக்கும் இடையில் நீண்டகாலமாகப் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முரண்பாடு நிலவி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, 29 வயதுடைய நண்பர் கூரிய ஆயுதத்தால் மற்றைய இளைஞரைத் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.







