மதுபோதையில் பேருந்தைச் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் 58 வயதுடைய சாரதி ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (19.11.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான வழித்தட இலக்கம் 05 பேருந்தை, மருதானை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் சங்கராஜ மாவத்தையில் சோதனைக்காக நிறுத்த முயன்றுள்ளனர்.

எனினும், பொலிஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாமல் சாரதி பேருந்தைத் தொடர்ந்து செலுத்தியுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் பேருந்தைப் பின்தொடர்ந்து சென்று அதனை இடைமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது சாரதி மதுபோதையில் இருந்திருக்கலாம் எனச் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரைக் கைது செய்து மேலதிக பரிசோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். அதில் அவர் மதுபானம் அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாரம்மல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சாரதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 35,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகள் மதுபோதையில் வாகனம் செலுத்துவது பயணிகளின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.







