விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்றமைக்கு தமிழக பா.ஜ.க தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த திருமாவளவன், இதன்போது பிரபாகரனின் இல்லத்திற்கும் சென்றுள்ளார்.
இந்த விஜயம் தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், பா.ஜ.க தரப்பிலிருந்து கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க.வின் பிரதான செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் திருமாவளவனின் இந்தச் செயலை விமர்சித்துள்ளார்.
பிரபாகரனின் இல்லத்திற்குச் செல்லும் எந்தவொரு இந்திய அரசியல் தலைவரும் தமிழர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகக் கருத முடியாது என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறான செயற்பாடுகள் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுக்கு அவமரியாதை செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், தமிழக அரசியல் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் காங்கிரஸ் தொடர்ந்து இணைந்து செயற்படுவது குறித்தும் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருமாவளவனின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் இந்த விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.








