இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம் நேற்று முன்தினம் (18) மின்னேரியாவில் நடைபெற்றது.
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், போர் வீரர் சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகமும் இராணுவ சேவா வனிதா பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த இம்முகாம், மின்னேரியாவில் அமைந்துள்ள 7ஆவது பீரங்கிப் படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
ஊனமுற்ற, ஓய்வுபெற்ற மற்றும் தற்போது சேவையில் உள்ள இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனைக் கருத்திற்கொண்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நலன்புரித் திட்டத்தின் 11ஆவது கட்டமாக இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பொலன்னறுவை மாவட்டத்தில் வசிக்கும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சுகாதாரத் தேவைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.







இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இம்முகாமில் பொது மருத்துவ ஆலோசனைகள், செயற்கை உறுப்புப் பராமரிப்பு சேவைகள், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
மருத்துவக் காரணங்களால் ஓய்வுபெற்ற பெருமளவிலான இராணுவ வீரர்களும், போரில் பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் இம்முகாமின் மூலம் மருத்துவ மற்றும் நலன்புரிச் சேவைகளைப் பெற்றுக்கொண்டனர்.







