ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஹட்டன் பொதுச் சந்தை வளாகத்தில் அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றப்பட்டமை சட்டபூர்வமான நடவடிக்கை என ஹட்டன்–டிக்கோயா நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், ‘வாழும் நகரம்’ (Living City) திட்டத்தின் கீழ் ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்வதற்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவதற்கு நகரசபை உறுப்பினர்களின் அனுமதி பெறப்பட்டதுடன், வியாபாரிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வெளியேறுவதற்குப் போதிய கால அவகாசமும் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எனினும், வியாபாரிகள் வெளியேறாத நிலையில் கடந்த 19ஆம் திகதி கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாகவும், அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த பின்னர் குறித்த வியாபாரிகளுக்கு சட்டபூர்வமாக வியாபாரம் செய்வதற்கான இடங்கள் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.







