இலங்கையில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.
மனித நுகர்வுக்கு ஏற்ற தரநிலைகளுக்கு அமைவாக ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டின் பல்வேறு ஐஸ்கிரீம் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்பு மாதிரிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை சேகரித்துள்ளது.
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் குறித்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐஸ்கிரீம் உள்ளிட்ட சந்தையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை சுகாதார அமைச்சும் ஆரம்பித்துள்ளது.

இதற்காக உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பரிசோதனைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டால், அவை தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டம் மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் SLS 223:2017 தரநிலைகளுக்கு அமைய, ‘ஐஸ்கிரீம்’ என விற்பனை செய்யப்படும் தயாரிப்புகளில் குறிப்பிட்ட அளவு பால் கொழுப்பு காணப்படுவது கட்டாயமாகும்.
பால் கொழுப்புக்குப் பதிலாக தாவரக் கொழுப்புகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை ‘ஐஸ்கிரீம்’ எனக் குறிப்பிட முடியாது எனவும், அவை ‘உறைந்த இனிப்புப் பண்டம்’ என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தயாரிப்புகளின் தரநிலைகளை உறுதிப்படுத்துவதுடன், தவறான பெயரிடல் மற்றும் லேபிள்கள் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுப்பதே இந்தப் பரிசோதனைகளின் முக்கிய நோக்கமாகும்.
நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் அதிகரித்துள்ள நிலையில், ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனைத் துறையைக் கண்காணிக்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







