சிலாபம் பகுதியில் போதைப்பொருட்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் 100 மருந்து மாத்திரைகளைச் சட்டவிரோதமாக எடுத்துச் சென்றதாகச் சந்தேகத்தின் பேரில் மருத்துவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் அருகிலுள்ள பிராந்திய வைத்தியசாலையில் பணியாற்றும் 38 வயதுடைய மருத்துவரே நேற்று (21) நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நரம்பியல் கோளாறுகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் சில மருந்துகள் போதைப்பொருட்களுக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் நிலையில், அவற்றைச் சேர்ந்த 100 மாத்திரைகள் மருத்துவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
சிலாபம் பொலிஸ் விசேட பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் சார்ஜன்ட் ஜயசூரிய தலைமையிலான குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின்போதே வேனில் பயணித்துக்கொண்டிருந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 26ஆம் திகதி சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







